பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,குறித்த பேருந்தினை செலுத்தி சென்ற சாரதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விபத்தில் சாரதி உயிரிழந்து விட்டதாக இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.சாரதி ஆசனத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து காணப்பபட்டார். எனினும் அந்த நபர் சாரதி இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.
பேருந்து சாரதி லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பசறை மற்றும் லுணுகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகர்களினால் தொழில்நுட்ப பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.
எனினும் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் பரிசோதனை மேற்கொள்வதறகு சில காலமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.