இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுமுல்ல – வில்லோரா வத்தை கிராம சேவகர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் – பம்புவெல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பகுதியில் உள்ள எல்தெனியா – தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்குள்விட்டிய கிராம சேவகர் பிரிவு, இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவின் இன்கெஸ்ரே பகுதியும், ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள போடைஸ் தோட்டத்தின் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட்கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் 13 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 706 ஆக உயர்ந்துள்ளது.