கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி கணவன் மனைவி இருவரும் இறந்தமை தொடர்பான செய்தி பொகவந்தலாவ சிறிபுர பகுதியில் பதிவாகியுள்ளது.
கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்த 3 நாட்களுக்கு பின்னர் அதாவது நேற்று (16) இரவு கணவன் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தாய் கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே உயிரிழந்தார்.
68 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் ஜே. கணேஷ் தெரிவித்தார். நேற்றைய தினமே உயிரிழந்த பெண் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.
அதில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது. அன்றைய தினம் இரவே தொற்றாளரான 76 வயதான எஸ். வடிவேல் என்ற பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தொடர்பிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரின் சடலங்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த குடும்பத்தில் உள்ள ஏனைய 6 அங்கத்தவர்களும் தற்போது சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.