இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஷ்னுவர்தன் ரெட்டி.இவருக்கும் நாகினேனி இந்து(18) என்பவருக்கும் சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பேச்புக் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது.
இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவராலும் பிரிய முடியாத அளவுக்கு நெருக்கமாகியுள்ளனர்.இவர்களின் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, இருவரும் வேறு சமூகம் என்பதால், இருவருக்கும் பெற்றோர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது.
ஆனால் திருமணம் செய்து கொள்வதில் காதலர்கள் பிடிவாதமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற சூழலில்,இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, திங்கட்கிழமை கல்லூரிக்கு சென்ற விஷ்னு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
அன்றைய நாள் இரவு, சுமார் 10.30 மணிக்கு பால் வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய இந்து, பின்னர் வீடு திரும்பவில்லை.இருவரும் அந்த இரவு ஒன்றாக சந்தித்து, பின்னர் சுராரெட்டி ரயில் நிலையத்திற்கு சென்று, இரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளனர்.
காலையில் அந்த வழியாக வந்த அப்பகுதி கிராம மக்கள் உடல் சிதைந்த நிலையில் கிடந்த இளம் ஜோடிகளை கண்டு, உடனடியாக ரயில்வே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மட்டுமின்றி, அவர்கள் தொடர்பில் தகவல் சேகரித்து, பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.அதன் பின்னர் நடந்த விசாரணையிலேயே, இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.