தமிழ் கடவுளாம் முருக்க கடவுளை எல்லா நாளிலும் வணங்கலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும் வாழ்வை செழிக்கச் செய்யும்.
அந்தவகையில் இன்று (25) அழகன் முருகனுக்கு உகந்த மிகவும் விசேடமான தைப்பூச திருநாள் ஆகும். தமிழ் நாட்டில் மட்டுமன்றி மலேசியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள ஆலயங்களில் முருப்பெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெறும்.
பொதுவாகவே, பூசம் நட்சத்திரம் என்பதே விசேஷமான நட்சத்திரம். அதிலும் தைப்பூசம் என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்த நன்னாள் ஆகும் .
தைப்பூசத் திருநாளில் தான் ஆறு முகங்களாக, ஆறு குழந்தைகளாக இருந்த முருகக் கடவுள் ஒருமுகம் கொண்டு, ஐக்கியமான நாளாக, ஏகமுகனாக முருகப்பெருமான் காட்சி அளித்ததாகப் போற்றப்படுகிறது.
ஞானத்தின் வடிவமாக முருகப்பெருமானைச் சொல்கிறது புராணம். ஆணவத்துடன் இருந்த சூரபத்மனை அழிக்கத்தான் வேல் கொண்டு புறப்பட்டான் முருகப் பெருமான்.
நம் கர்மாவை முடிவுக்குக் கொண்டு வந்து, இம்மையிலும், மறுமையிலும் அருள்பாலிக்கும் குருவாகத் திகழ்கிறார் ஞானவேல் முருகம் பெருமான். அப்படி ஞானத்தை அருளும் முருகப்பெருமானை வழிபடும் திருநாளாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஆறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகக் கடவுளையும் தைப்பூச நாளில் வழிபடுவார்கள் பக்தர்கள்.
பழநியம்பதியில், மலை மீது குடியிருக்கும் தண்டாயுதபாணியை தரிசிப்பது இன்னும் சிறப்பானது. அதேபோல், அந்த நாளில் ராஜ அலங்காரத்துடன் திகழும் முருகக் கடவுளைத் தரிசிப்பது செல்வத்தையும் வாழ்வில் இன்னல்களை பொக்கி இன்பம் தரும் என்பது ஐதீகம்.
இதனால்தான் தைப்பூசத் திருநாளின் போது பழநி திருத்தலத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி, அரோகரா கோஷம் எழுப்பியபடி வருகிறார்கள்.
அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த லட்சக்கணக்கான மக்கள் பழநி என்றில்லாமல் அனைத்து முருகன் கோயிலுக்கும் தரிசிக்க வருகிறார்கள். தைப்பூச நாளில் எல்லாக் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும்.
அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தைப்பூசத் திருநாளில், ஞானக் கடவுளை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும்.
அதேசமயம் தைப்பூசத் திருநாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சார்த்தி செந்தில் வேலனை தரிசித்து பிரார்த்தனைச் செய்யுங்கள். உங்கள் , வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்து பனிபோல் விலக வைப்பான் சிங்காரவேலன் .