இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் மறு அறிவித்தல் இன்றி நாளை முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
மின் கட்டண உயர்வை எதிர்த்து கையெழுத்து சேகரிக்கும் நிகழ்ச்சி
இதேவேளை, மின் கட்டண உயர்வை எதிர்த்து 69 இலட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
குறித்த மனு மீதான கையொப்பங்கள் இன்று 4 இடங்களில் சேகரிக்கப்படவுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
அதேவேளை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள மின் கட்டண திருத்தம் இவ்வருட மின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.