இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வெல்லாவெளியில் இன்று (18) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று தரை வழிப் போராட்டமாக மாறியிருக்கின்றது.
எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைமைக்கு இந்த அரசு தள்ளிருக்கின்றது.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளை அமைச்சரும், அரசாங்கமும் கவனத்தில் எடுக்காத காரணத்தினால் கடல்வழிப் போராட்டம் நடாத்தப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாகத் தரைவழிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வடக்கு கிழக்கிலே அதனது இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
போராட்டம் என்பது அறிந்து வருவது. அதற்கு எவரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை. இது மக்களுக்காக, விவசாயிகளுக்காகச் செய்யும் போராட்டம்.
ஆனாலும். நாங்கள் மண்வெட்டியை வைத்திருப்பது தான் விமர்சனப் பொருளாக இருக்கும். எம்மை விமர்சிப்பது பரவாயில்;லை. இவ்வாறாகவாவது எமது போராட்டம் இந்த அரசுக்குப் போய்ச் சேர வேண்டும்.
எங்களுடைய வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மீன்பிடியையும், விவசாயத்தையும் நம்பி வாழும் மக்களே அதிகம். அதிலும் இன்றைய தினம் நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் வெல்லாவெளிப் பிரதேசம் தொன்னூறு வீதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள்தான்.
விவசாயிகளுக்கு இன்று உரம் இல்லாத நிலையில் இந்த மாவட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறாமல் தங்களது வியாபார நலன்களை மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம்.
இயற்கைப் பசளையின் மூலம் விசாயம் செய்து எமது விளைச்சல்களை அதிகரிக்கலாம் என்று குழந்தைப் பிள்ளைத் தனமாகவும், குரங்குச் சேட்டையாகவும் கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இயற்கைப் பசளை பாவித்து விவசாயத்தில் அதிக விளைச்சல் பார்க்கலாம் என்று சொல்லுபவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் அல்ல. அவர்கள் வியாபாரிகள்.
நானும் உண்மையில் விவசாயி இல்லைதான் ஆனால் விவசாயிகள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்பவன் என்ற அடிப்படையில், மக்களோடு மக்களாக இருப்பவர்கள். தினமும் விவசாயிகள் அவர்களின் துயரங்களைச் சொல்லும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட யூரியா இன்று பத்தாயிரம் வரை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு அதிகமான விலைக்குப் பசளை வாங்கும்போது நெல் விலை அதிகரிக்கும் அதன்மூலம் அரிசி விலை அதிகரிக்கும். எனவே இது வெறுமனே விவசாயிகளின் பிரச்சனை அல்ல. சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை.
இது விவசாயிகளுக்கான போராட்டமே தவிர இதில் நாங்கள் அரசியல் இலாபம் தேடவில்லை. அரசோடு இருப்பவர்களுக்கும் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன் வெளிநாடு சென்றமையால் அவரால் வர முடியவில்லை. ஆனால் மற்றைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் வரவில்லை.
ஏன்? விவசாய மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? இது அரசியற் கட்சி சார்ந்த ஒரு போராட்டம் அல்ல. இது மக்களின் போராட்டம் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்கள் என்பதற்காக மக்களுக்காகப் போராடாமல் இருக்க முடியாது.
கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு வாக்களித்த மக்கள் உரமில்லாமல் கஸ்டப்படும் பொழுதும் கூட உங்கள் காரியாலங்களை மூடிக்கொண்டு குளிர் அறைகளில் இருந்து கொண்டிருப்பது மிகவும் கவலையான விடயம்.
இந்த வாரம் முழுவதும் போராட்ட வாரமாகவே இருக்கும். நேற்றைய தினம் எங்கள் மீனவர்களுக்காக, இன்றைய தினம் எங்கள் விவசாயிகளுக்காக, எதிர்வரும் நாட்களிலே காணி அபகரிப்பு, அண் அகழ்வு என்பவற்றுக்கெதிரன போராட்டங்கள் நடைபெறும்.
எனவே இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள்” என தெரிவித்தார்.