மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10ஆயிரம் வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய் நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் “மதிப்பிற்குரிய பிரஜைகளாக” அவர்களை மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வீடுகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையின் மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு விசேட அம்சமாகும்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.