இந்தியா- மும்பையில் 19,650 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், 19,650 கோடி ரூபா செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச வழித்தடங்கள் தொடங்க திட்டமிடப்படுள்ளது.
தற்போது இங்கு நான்கு முனையங்கள், இரண்டு ஓடுபாதைகள் உள்ளன.
மேலும் ஒரு பிரத்யேக வி.வி.ஐ.பி முனையமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுமானம் 2026 தொடங்கி 2030 ல் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையகமாக கொண்ட ஜஹா ஹதீத் கட்டிடக் கலைஞர்களால் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் 47 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும். மின்சார பஸ் சேவைகளையும் இயக்கும். இது water taxi சேவை மூலம் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாமரை இதழ்களை போன்ற 12 தூண்களும், 17 பிரமாண்ட நெடுவரிசை தூண்களும் விமான நிலையத்தின் கூரை விதானங்களை தாங்கியபடி நிற்கின்றன. நில அதிர்வுகள், புயல், ஆகியவற்றை தாங்கும் வகையில் விமான நிலையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை விமான நிலையத்தை எளிதில் அடைய அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ரெர்மினல்-1 ஆண்டுதோறும் 2 கோடி பயணிகளையும், 8 லட்சம் மெட்ரிக் தொன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது.
மூவாயிரத்து 700 மீட்டர் நீள ஓடுபாதையை கொண்டுள்ளதால், ஏர்பஸ் A380 போன்ற பெரிய விமானங்களை நிறுத்தும் திறனையும் பெற்றுள்ளது.
இந்த விமான நிலையத்தின் பங்குகளில் 74 சதவிகிதம் அதானி குழுமத்திடமும், 25 சதவிகிதம் மகாராஷ்டிரா அரசிடமும் உள்ளன.
புதிய விமான நிலையத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி உரையாற்றுகையில்,
”இந்த விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க வசதியாக நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவையும் கொண்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை,” என்றார்.