எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தனது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பயணத் தடை உட்பட கடுமையான முடக்கல் உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது.
இந் நிலையில் புதிய அறிவிப்பின் மூலம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடங்கியுள்ள இந்திய சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெறுவதுடன், சர்வதேச சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் “பல்வேறு உள்ளீடுகளை பரிசீலித்த பின்னர், 2021 ஒக்டோபர் 15 முதல் பட்டய விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய சுற்றுலா விசா வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அத்துடன் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டவர்கள் 2021 நவம்பர் 15 முதல் புதிய சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைய முடியும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் 10.93 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கண்டுள்ள ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவுக்கு, சுற்றுலா ஒரு முக்கியமான துறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

