இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானம் 6E 1703 திங்கட்கிழமை (27) தெற்கு சீன நகரமான குவாங்சோவில் தரையிறங்கியது.
இதில் சுமார் 180 பயணிகள் இருந்தனர்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட் தொற்றுநோய் பரவலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான விமானங்கள் முதன்முதலில் நிறுத்தப்பட்டன.
மேலும் சர்ச்சைக்குரிய இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ஒரு கொடிய மோதலுக்குப் பின்னர் அவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
ஆனால் இரு நாடுகளும் தொடர்ந்து உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பி வருகின்றன.
கடந்த ஆண்டு எல்லை ரோந்துப் பணியில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டின.
நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை எளிதாக்கும்” என்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்றும் இந்திய அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இது அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் படிப்படியாக இயல்பாக்கப்படுவதைக் குறிக்கும் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் ஒரு பகுதியாகும்.
ஆகஸ்ட் மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு விஜயம் செய்தார்.
ஷெங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்தார்.
அந்த மாத தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வருகை தந்து டெல்லியில் அதிகாரிகளுடன் பாதுகாப்பு, ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
பயணத் தரவு வழங்குநரான OAG இன் கூற்றுப்படி, சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு இரு நாடுகளும் 2019 ஆம் ஆண்டில் சுமார் 2,588 திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

