இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ‘கௌரவக் கொலை’ செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த இந்து மத்ததைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களது உடலங்கள் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட இரவில், அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது காஜலின் மூன்று சகோதரர்களும் அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இதையடுத்து சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்றுவிட்டு, உடலங்களை இரகசியமாகப் புதைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த பிறகு, குற்றத்தை மறைக்க முயன்ற சகோதரர்கள், அர்மான் தனது தங்கையைக் கடத்திச் சென்றதாக ஜனவரி 20 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், சகோதரர்களின் வாக்குமூலத்தில் காணப்பட்ட முரண்பாடுகளைக் கண்டறிந்த பொலிஸார், தீவிர விசாரணை நடத்தி உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தனர்.
தற்போது காஜலின் மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 400 குடும்பங்கள் வாழும் உம்ரி கிராமத்தில் இதுவரை மத ரீதியான மோதல்கள் ஏற்பட்டதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் இப்போதும் ஒற்றுமையாகவே இருக்கிறோம், ஆனால் இந்தச் சம்பவம் ஒரு வகையான பயத்தையும் மௌனத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என உள்ளூர்வாசி ஒருவர் கவலை தெரிவித்தார்.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 38 கௌரவக் கொலைகள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளன. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

