இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM) தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி கூறும் மற்றொரு காணொளி வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இராணுவ நெறிமுறைகளுடன் மரியாதை செலுத்துமாறு பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் (GHQ) மூத்த தளபதிகளுக்கு அறிவுறுத்தியதாக காஷ்மீரி தெரிவித்தார்.
அதே நிகழ்வின் மற்றொரு காணொளியில், டெல்லி மற்றும் மும்பை உட்பட இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் மசூத் அசாரின் ஈடுபாட்டை இலியாஸ் காஷ்மீரி உறுதிப்படுத்தினார்.
பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த இரவு நேரத் தாக்குதலில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பஹவல்பூர், கோட்லி மற்றும் முரிட்கே உள்ளிட்ட ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது.
இலக்குகளில் ஜெய்ஷ்-இ-தொய்பா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் வேரூன்றிய வலையமைப்புகள் அடங்கும்.
தாக்குதல்களுக்குப் பின்னர், தாக்குதல்கள் துல்லியமானவை என்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்று இந்தியா கூறியது.
இருப்பினும், அந்த இடங்கள் பயங்கரவாத மையங்கள் என்பதை ஒப்புக் கொள்ளாமல், தாக்குதலில் 26 பேர் இறந்ததாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியது.