கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசு இந்திய அரசாங்கத்திடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டில்லியில் உள்ள இலங்கை தூதர், சமீபத்தில் நாக்பூர் சென்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றது.நாட்டின் பொருளாதார நிலை மிக மோசம். இந்திய அரசு உதவ வேண்டும். அதற்கு, நீங்கள் தான் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, பாகவத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னொரு பக்கம், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், கொழும்பில் உள்ள இந்திய துாதரை அழைத்துப் பேசி அவரும், 15 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசிடமிருந்து கடனாக பெற்றுத் தருமாறும் தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ரஷ்யா – -உக்ரைன் போரால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, பல கோடி ரூபாய் செலவு இருக்கும் நிலையில், இலங்கை கேட்கும் உதவியை எப்படி செய்ய முடியும்’ என, மத்திய அரசின் அதிகாரிகள் கையை விரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தன்னை சந்தித்த இலங்கை தூதரிடம், தாங்கள் கேட்கும் அளவிற்கு உதவ முடியாவிட்டாலும், ‘உதவி செய்கிறேன்’ என பாகவத் வாக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.