அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் திருவொற்றியூரில் போட்டியிடுகிறேன் என நேர்காணல் ஒன்றில் சீமான் விளக்கமளித்தார்.
இந்நிலையில், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி மீன்பிடி தடை பகுதி அறிவிக்குமாறு கோரி அதானி நிறுவனம் தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அதானி நிறுவனம், தங்கள் கட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை மீன்பிடி தடை பகுதி என்று அறவிக்கக் கோரி இந்திய அரசின் தேசிய நீருப்பரப்புகள் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளது என்று தெரியவருகிறது.
கடந்த 26/08/2019 என தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மீனவர்களின் படகுகளும் வலைகளும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு அபாயமாக உள்ளன என குறிப்பிட்டு, துறைமுகத்தைச் சுற்றி மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சென்னையைச் சார்ந்த மீனவர் சரவணன் என்பவர் தமிழர்நாடு கடல்சார் வாரியத்திடம் தாக்கல் செய்த தகவல் உரிமை கோரிக்கைக்கு விடையாக கடந்த 09/03/2021 அன்று இந்தக் கடிதம் பெறப்பட்டுள்ளது.
அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்! நானும், நாம் தமிழர் கட்சியும் காட்டுப்பள்ளி மக்களோடு இறுதிவரை உடன் நிற்போம்!#StopAdaniSaveChennai pic.twitter.com/Ys5jIzVEoX
— சீமான் (@SeemanOfficial) March 14, 2021
எவ்வளவு சிக்கல்களும் அச்சுத்தல்களும் வந்தாலும், நானும், நாம் தமிழர் கட்சியும், காட்டுப்பள்ளி மீனவர்களுடனும் மக்களுடனும் எல்லா நிலைகளிலும் துணை நின்று, ஒருபோதும் இதுபோன்ற மீன்பிடி தடை செயல்பாடுகளையும், துறைமுக விரிவாக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.