பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மூன்று வாரங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 3ஆம் திகதி சொகுசுக் கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஆர்யன்கான் கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று முன்தினம் மும்பை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், அவர் உடனடியாக விடுதலை செய்யப் படவில்லை.
இதனையடுத்து ஏறத்தாழ 27 நாட்களுக்குப் பின்னர் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆர்யன் கான் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் , வெளி நாடு செல்வதெனில் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பிணை நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.