நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியுடன் மின் கட்டணங்களை 50 வீதமாக அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் 60 வீதத்திற்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் அரசாங்கத்திற்கு கூறிக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி மற்றும் எரிசக்தி நெருக்கடி சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் இல்லாத காரணத்தினால், இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டித்து வருகிறதே அன்றி குழ்ச்சிகள் எதுவுமில்லை. அந்த சூழ்ச்சி என்ன என்பதை அறிய ராஜபக்ச குடும்பத்தினர் கண்ணாடி முன்னால் சென்று பார்த்தால் அறிந்துக்கொள்ளலாம்.
நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பாக பலர் பலவற்றை கூறுகின்றனர். சூழ்ச்சியான கடன் பற்றி கூறுகின்றனர். சீர்குலைப்பு வேலை என்றும் கூறுகின்றனர். ஏற்பட்டுள்ள நெருக்கடியின் ஆழத்தை உணராமல் இருந்து வருகின்றனர்.
மார்ச் மாதம் 4 ஆம் திகதி இலங்கை இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி இருந்ததாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில், மார்ச் 4 ஆம் திகதியுடன் சேர்ந்த செலுத்த வேண்டிய தொகை 900 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இதனை செலுத்த இலங்கை மத்திய வங்கியால் முடியாமல் போனது. 900 மில்லியன் டொலர்களை செலுத்தி இருந்தால், இலங்கை கடந்த 4 ஆம் திகதியுடன் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும்.
அது நடக்காமல் உதவும் வகையில் இந்தியா இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கியது. வங்குரோத்து நிலையை அடையும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் உண்மையான நெருக்கடி. சூழ்ச்சியும் அதுதான்.
இதனால், ராஜபக்ச குடும்பத்தினர் கண்ணாடிக்கு முன்னால் சென்றால், சூழ்ச்சி என்ன என்பதை அறிந்துக்கொள்ளலாம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.