இந்தியா, ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பாடசாலை ஒன்று உள்ளது. இந்தப் பாடசாலையில் கணேஷ் என்ற மாணவர் 7ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் புதன்கிழமையன்று மாணவன் கணேஷ் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் அவரது வகுப்பு ஆசிரியர் மனோஜ் பிரம்பால் அடித்துள்ளார்.
இதில் மாணவன் மயங்கி விழுந்துள்ளார். அப்போது வேண்டும் என்றே மயங்கி விழுந்ததை போல் நடிக்கிறாயா என கூறி மேலும் அடித்துள்ளார். இது பறித்து அறிந்த மாணவனின் பெற்றோர் உடனே பாடசாலைக்கு வந்தனர். அப்போது வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் அடித்ததில் உங்கள் மகன் மயங்கி விழுந்துவிட்டதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிறகு உடனே மாணவன் கணேஷை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஆசிரியர் மனோஜ் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மாணவனை அடித்த ஆசிரியர் மனோஜை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாடசாலையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.