மத்திய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான இடமாற்றங்களை விசாரிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது.
மத்திய மற்றும் மாகாண சபைத் துறைகளில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நியாயமற்ற காரணங்களுக்காக சேவை நிலையங்களுக்கு இடையில் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அந்தக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுச் சேவையின் சுதந்திரத்தை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல்களுக்கு முன்னதாகவே, குறித்த இடமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
அத்துடன், இது, பொது சேவையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அரசியல் மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே மத்திய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து தன்னிச்சையான இடமாற்றங்களையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் மாகாண சபை அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளது