நாட்டு மக்களை நடு வீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது ராஜபக்ச அரசு. இந்த அரசை மக்கள் விரைவில் அடித்து விரட்டுவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராஜித எம்.பி., இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க வேண்டாம் எனவும், அவர் தலைமையிலான அரசை ஆட்சியில் ஏற்ற வேண்டாம் எனவும் அன்று நாட்டு மக்களிடம் நாம் கேட்டிருந்தோம்.
ஆனால், மக்களில் பலர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கினர். அவர் தலைமையிலான அரசை நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், இறுதியில் நடந்தது என்ன?
இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நடுவீதியில் கொண்டு வந்து விட்டுள்ளது ராஜபக்ச அரசு. நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துள்ளது. பட்டினிச் சாவை நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த அரசை மக்கள் விரைவில் அடித்து விரட்டுவர். சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலரும்.
அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது. இவர்களிடம் சர்வதேச கொள்கையும் இல்லை, அவர்களுக்கென்று ஒரு தனியான கொள்கையும் இல்லை.
அரசாங்கம் சீனாவின் பின்னால் செல்லும் போது ஏனைய அரசியல் தரப்பினர் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களைத் திருப்திப்படுத்தவே சில செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போது இலங்கை கடற்படையினர் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரே கொள்கையில் செயற்படுகின்றனர்.
ஆனால் சீனா வேறு கொள்கையில் உள்ளவர்கள். எனவே அரசாங்கம் உண்மையில் இரு தரப்பையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ளார்.