மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளியில் அம்மம்மாவின் இறப்பினை கேள்வியுற்ற பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குருமன்வெளி, மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞர் அவர் வசித்துவந்த வீட்டினுள் தூக்கில் தொங்கியதைக் கண்ட உறவினர்கள் அவரை அதிலிருந்து மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் குறித்த இளைஞர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று வாக்கு மூலங்களை பதிவு செய்ததன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிகளை கேட்டுக்கொண்டதன் நிமிர்த்தம், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.