அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட செயலாளராகவும் அண்மைய காலமாக நாடாளுமன்ற விவகார செயலாளராகவும் கடமையாற்றிய உதித் லொக்கு பண்டார,( Udith lokubandara) கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த விடயம் பகிரங்கமான செய்தி.
எனினும் அப்படியான சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். சாதாரணமாக தந்தையின் பணத்தை புதல்வர்களே எடுப்பார்கள் என்பதால், வேறு ஒருவர் இவ்வாறு பணத்தை எடுத்தமை சம்பந்தமாக தான் அறியாத விடயத்தை விசாரித்து பார்க்க வேண்டும் என நாமல் பகிரங்கமாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை உதித் லொக்கு பண்டார தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். உதித் லொக்கு பண்டார, நாமல் ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான நண்பர்.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய சம்பவத்தையும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்திருந்தார். தனது தந்தை நோயாளி ஒருவரை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அப்படி சென்ற தந்தை ஊடகங்கள் நோயாளியாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச, (Chamal Rajapaksa) பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
கம்பளை நாரான்விட ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையில் புத்தர் சிலை ஒன்றை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் திடீர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியாது போனது என சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
உதித் லொக்கு பண்டார வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது பற்றிய விடயம் பிரதமர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது தெரியவந்துள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு பொய்யான தகவல்களை ஊடகங்களிடம் கூறிய இந்த இரண்டு சம்பவங்களும் சில தினங்களுக்கு முன்பே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.