விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்ததாகவும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட முடிவு அல்ல எனவும் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை தொடர்பில் ஜனாதிபதி, நிதியமைச்சர் உட்பட முழு அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதும் தாக்குதலை தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசாங்கத்தின் இந்த முடிவு இவர்கள் இருவருக்கு எதிராக மாத்திரம் எடுக்கப்பட்ட முடிவல்ல. இதற்கு முன்னர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னாள் அமைச்சர்கள் இருவரும் செய்த சேவைக்கான கௌரவம் அப்படியே இருக்கின்றது.
அவர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் இதுவரை அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை.
அரசாங்கத்தின் 11 கூட்டணிக் கட்சிகள் அண்மையில் நடத்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகள், யோசனைகள் என்பதை விட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் நடவடிக்கை.
அது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கையை போன்றது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் கருத்துக்ளை வெளியிட்டிருந்தார்.