அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொடுப்பனவுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்றும் திறைசேரி ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்குத் தேவையான நிதித் தொகையை 6 மாதங்களுக்குள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியம் வழங்கும் பணிக்கொடை முறையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்து முன்மொழிவை சமர்பிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக, அரசாங்க அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிக்கொடையை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.