அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ச, இலங்கையை பாதுகாப்பாக எவ்வாறு உறுதிமொழி வழங்க முடியும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கப் பிரஜையொருவர் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக அங்கம் வகிப்பதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகி அவர் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார்.
எந்த நேரத்திலும் அமெரிக்காவை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என உறுதிமொழி வழங்கி சத்திப் பிரமாணம் செய்து கொண்டுள்ள பசில் ராஜபக்ச, எவ்வாறு இலங்கையின் நலனை பாதுகாக்க செயற்படுவார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் கடமையாற்ற தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
பசில் ராஜபக்ச அமெரிக்காவின் நலனை கருத்திற் கொண்டு இலங்கையுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் பாதக விளைவுகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அனுபவிக்க நேரிட்டுள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதெனவ் மின் உற்பத்தி நிலையத்தை வழங்குவதற்கு நள்ளிரவில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை இதற்கு சிறந்த உதாரணம் என சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேறும் ஓர் நாட்டின் அரசியல் அமைப்பினை பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நபர் ஒருவர் நிதி அமைச்சராக அல்ல அலுவலகமொன்றின் உதவியாளராகக் கூட பதவி வகிக்க தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மனுவை விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அதிகாரம் இல்லை எனவும் இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறும் சட்ட மா அதிபர் திணைக்களம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்த மனு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி மீள விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.