உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவிக்கையில், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவித் தொடர்பான தடையை அறிவித்தார்.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்வதில் தொடக்கம் முதலே ஹங்கேரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதுவரை உக்ரைன் முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம் நடக்கும் அறையில் இருந்தும் தடாலடியாக விக்டர் ஓர்பன் வெளியேறியுள்ளார். இருப்பினும், உறுப்பு நாடாக ஏற்றூக்கொள்ளும் பேச்சுவார்த்தையை ஐரோப்பிய ஒன்றிய துவங்கியுள்ளதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் உரிய முடிவெடுக்கப்படும் என்றே எஞ்சிய தலைவர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
26 நாடுகளும் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்றே நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். முன்னதாக 61 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க ராணுவத் தளவாட உதவி தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஒப்புதல் கோரியிருந்தார்.
ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பெரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த முடிவும் தாமதமாகி வருகிறது.
ரஷ்யப் படைகளுக்கு எதிராக 660 நாட்களாக தொடர்ந்து போரிட்டு வருவதால், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிதியுதவியை முழுமையாக சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.