அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன.
இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து.
மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது.
ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இது ஆகஸ்ட் 1 முதல் செயல்படுத்துவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய 30% இறக்குமதி வரி விகிதத்தில் பாதியாகும்.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சில பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரிகளுடன் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அதன் சந்தைகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார்.
வான் டெர் லேயனும் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியதுடன், இது இரு பங்காளிகளுக்கு இடையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறினார்.
ஏனெனில் அவை உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், வொஷிங்டனின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து, அவர் இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் வரி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஸ்கொட்லாந்தன் தெற்கு அயர்ஷயரில் உள்ள டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில் ட்ரம்ப் மற்றும் வான் டெர் லேயன் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின் பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்க இராணுவ உபகரணங்கள் உட்பட, வொஷிங்டனில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முதலீட்டை $600 பில்லியன் (£446 பில்லியன்) அதிகரிக்கும் என்றும், எரிசக்திக்காக $750 பில்லியன் செலவிடும் என்று கூறினார்.
அதேநேரம், அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் அணு எரிபொருட்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்யப்படும் அந்த முதலீடு, ரஷ்ய மின்சார ஆதாரங்களை ஐரோப்பியர்கள் நம்பியிருப்பதைக் குறைக்க உதவும் என்று வான் டெர் லேயன் கூறினார்.