கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சபரிமலை யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருவதால் 10 அணைகள் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கேரளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 25 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில், மழை வெள்ள நிலவரம் குறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா வர்கீஸ் ஆகியோர் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
கனமழை காரணமாக காக்கி அணை நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பம்பை நதியில் 15 செ.மீ. அளவுக்கு நீரின் அளவு அதிகரிக்கும். அணையில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருக்கெடுக்கும் நீரின் அளவையும், 20}ஆம் தேதியில் இருந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படும் மழையையும் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரை நிறுத்தம்: வரும் 20-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க இயலாது. அக்கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இப்போதைக்கு சபரிமலை யாத்திரையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பம்பை நதியில் தண்ணீரின் அளவு அதிகரித்துவிட்டால், அதன் பின் சபரிமலை யாத்திரை மேற்கொள்வோரை மீட்பது சிரமமாகிவிடும்.
காக்கி நதியின் இரு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை தற்போது குறைந்துள்ளது. எனினும் 20-ஆம் தேதியில் இருந்து மீண்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பம்பை நதியின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான குழுவும் தயாராக உள்ளது.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: தற்போது மக்கள் பீதியடையத் தேவையில்லை. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய தகவல்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது. எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணைகள் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. மற்ற 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் கிழக்கு மலைப் பகுதிகளிலும், நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகளிலும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் சில அணைகளின் மதகுகள் திறந்துவிடப்படும் என்று கேரள அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு திறந்துவிடப்படுவதால் தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் உள்ள நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.
அணை திறப்பு : இடுக்கி அணையில் நீரின் அளவு திங்கள்கிழமை 2,396.96 அடியாக அதிகரித்தது. அந்தப் பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி அணையின் முழுக் கொள்ளளவு 2,403 அடியாகும். இடுக்கி அணை செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்படும் என்று மாநில நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டீன் தெரிவித்துள்ளார்.
சோலையாறு, பம்பை, காக்கி, இடமலையாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நிலைமையை ஆராய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கனமழை காரணமாக அச்சன்கோவில் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள செரிக்கல், பூழிக்காடு, முடியூர் கோணம், குரம்பாலா பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் உயர் அதிகாரியாக காவல் துறை ஏடிஜிபி விஜய் சாகரேவை கேரள அரசு நியமித்துள்ளது.