சென்னையில் நகை, பணத்துக்காக முதலாளியம்மாவை கொலை செய்த தம்பதி பொலிசில் சிக்கியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பல புதிய பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி. இவர் மனைவி கலைவாணி.
ரவி தொழிலை கவனிக்கச் சென்று விட கலைவாணி பெரும்பாலும் வீட்டில் தனியாகவே இருப்பார். கழுத்தில் 15 சவரன் தாலி செயினும், கைகளில் தங்க வளையல்களும் என எப்போதும் அணிந்திருப்பது கலைவாணியின் வழக்கம்.இந்த நிலையில் கலைவாணி வீட்டுக்கு ராகேஷ் என்பவர் பெயின்டிங் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, கலைவாணியிடம் தான் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு ஒரு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பரிதாபமாக கேட்டுள்ளார்.
இதனால், அவரை வீட்டு காவலாளி வேலைக்கு வைத்துள்ளார். தொடர்ந்து, தன் மனைவி ரேவதியையும் அழைத்து வந்து கலைவாணி வீட்டில் பணிப்பெண் வேலைக்கு ராகேஷ் சேர்த்துள்ளார்.கணவன், மனைவி இருவரும் கலைவாணி வீட்டிலேயே தங்கியுள்ளனர்.இந்த நிலையில் தொழிலுக்கு சென்ற ரவி போன் செய்தும் கலைவாணி எடுக்காததால் சந்தேகமடைந்து இரு தினங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டு கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கப்படவில்லை.பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையறையில் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கலைவாணி கிடந்திருக்கிறார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கலைவாணியை தூக்கி சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.சம்பவம் குறித்த விசாரணையில் ராகேஷ் – ரேவதி தம்பதி முதலாளியம்மா கலைவாணியை கொலை செய்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியது தெரியவந்தது.
மேலும் பெங்களூரில் பதுங்கியிருந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.இது குறித்து பொலிசார் கூறுகையில், கலைவாணியை அவர்கள் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கின்றனர். கலைவாணி அவர்களுடன் போராடியிருக்கிறார்.
இதையடுத்து தலையில் அவரை பலமாக தாக்கியுள்ளனர்.கலைவாணியைக் கொலை செய்த பிறகு அவர் அணிந்திருந்த ஒவ்வொரு நகைகளையும் ராகேஷ் எடுத்திருக்கிறார். கலைவாணி அணிந்திருந்த மெட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை என கூறியுள்ளனர்.