புது வருடப் பிறப்புடன் பல்வேறு மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருவதுடன், அரசியல் ரீதியான முடிவுகள் அரசியல் களத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த அதிரடியாக ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் சில அமைச்சுப் பதவிகளை கோட்டாபய ராஜபக்ச பறிப்பார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கீழ் மேலும் பல அமைச்சுக்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிமல் லான்சாவை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்ட போதிலும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான தற்போதைய நிலைமைகள் எனவும், கடைசி நேரத்தில் இவை மாறலாம் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எது எவ்வாறாயினும், அமைச்சுப்பதவிகளை பிடுங்குவதனாலோ அல்லது அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவருவதனாலோ தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியாது என்று அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.