திறைசேரி உண்டியல் கொள்வனவின் ஊடாக அரசாங்கத்துக்கு 1,843.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளடங்கலாக ஐவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தாம் இதுபற்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருப்பதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறைப்பாடானது கடந்த 2012 ஆம் ஆண்டு கிரீஸ் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
கிரீஸினால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்ததன் விளைவாக அரசாங்கத்துக்கு 1,843,267,595 ரூபா நட்டம் ஏற்பட்டதாக அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.