கொழும்பிலுள்ள முக்கியமான வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கதைப்பதைப் போன்று நடித்து, தொலைபேசி ஊடாக கொழும்பின் முன்னணி விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து அதற்கு பதிலாக போலியான காசோலைகளை வழங்கி மோசடி செய்யும் திட்டமிட்ட கும்பலொன்று தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு, மோசடி தடுப்புப் பிரிவினர் இவ்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலானது, பிரதான விற்பனை நிலையங்களுக்கு அழைப்பை எடுத்தி, தாம் வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து பேசுவதாக குறிப்பிட்டு, பொருட்கள் குறித்த விடயங்களை வினவி தமக்கு தேவையான அளவினை தருவித்துள்ளனர்.
பின்னர் விற்பனையாளர்கள், குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு மீள அழைப்பை ஏற்படுத்தும் போதும், சாதாரணமாக வெளிநாட்டு தூதரகம் ஒன்றுக்கு அழைப்பை ஏற்படுத்தும் உணர்வை கொடுக்கும் வண்ணம், அதனை ஒத்த போலியான குரல் பதிவுகளை ஒலிபரப்பி அதன் பின்னர் குறித்த நபர் தொடர்புபடும் வகையில் தொலைபேசி கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அண்மையில் கொழும்பின் இரு பிரதான தொலைபேசி விற்பனை நிலையங்களில் இருந்து இந்த மோசடிக் கும்பல் 4.7, 2.9 மில்லியன் ரூபா பெறுமதியான தொலைபேசிகளை இதே மோசடி பாணியில் பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த தொலைபேசிகளைப் பெற்று அதற்காக இரு காசோலைகளையும் வழங்கியுள்ளதுடன், அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது விசாரணைகலில் தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே மோசடி தடுப்புப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் மோசடிக் காரர்கள் மிக நுட்பமாக மக்களை ஏமாற்றும் நிலையில், பொருட் கொள்வனவு மற்றும் விற்பனையின் போது மிக அவதானமாக நடந்துள்ளுமாரு பொலிசார் பொது மக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
அத்துடன் இவ்வாறான நூதன மோசடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட வேறு எவரேனும் இருப்பின் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலக்கம் 182, எல்விட்டிகல மாவத்த, கொழும்பு 8 எனும் முகவரியில் உள்ள மோசடி தடுப்பு பணியகத்துக்கோ சென்று முறையிடுமாரும் பொலிசார் கோரியுள்ளனர்.