இந்தியாவில் கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டு, குழந்தையுடன் வீதியில் ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண், அதே ஊரில் பொலிஸ் அதிகாரியாக பணியில் அமர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா (வயது 31) தனது கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பின் போது பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனி இரண்டு வருடம் காதல் கணவருடன் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனியை பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இதனால் அவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஆனாலும், வைராக்கியத்துடன் இருந்த ஆனி மனதிடத்துடன் வர்கலாவில் டெலிவரி செய்வது, எலுமிச்சம் பழம் விற்பது திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு கல்வியையும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.
தற்போது பொலிஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, வீதியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே பொலிஸ் அதிகாரியாக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக்கில் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வர்கலா சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்கிரீம் விற்றேன். இன்று, நான் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராக அதே இடத்திற்குத் திரும்புகிறேன் என கூறி உள்ளார்.
கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு அவரது கதையை ஒரு குறிப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளது,
“இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் சகாவின் வாழ்க்கை கதை என குறிப்பிட்டுள்ளது.