சென்னையை அடுத்த திருவாலங்காட்டில், தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் வாயில் விஷம் கலந்த குளிர்பானத்தை ஊற்றி கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மென்னவேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் – பிரியங்கா தம்பதி. திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி ஒட்டுனர் ராஜ்குமார் என்பவனுக்கும் பிரியங்காவுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது தோழி பவித்ரா வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேறிய பிரியங்கா, திருவாலங்காட்டில் வாடகை வீடு எடுத்து ராஜ்குமாருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
வந்த இடத்தில் பிரியங்காவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவந்து, கடுப்பான ராஜ்குமார், பிரியங்காவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். இதில் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்ற பிரியங்காவை சமாதானம் செய்வதுபோல் பேசி வீட்டுக்கு அழைத்து வந்த ராஜ்குமார், அவரது இரு கைகளையும் பின்பக்கமாகக் கட்டி, குளிர்பானத்தில் விஷம் கலந்து வாயில் ஊற்றினான் என்று கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் பிரியங்கா உயிரிழந்துவிட, நல்ல பிள்ளை போல போலீசுக்கும் பிரியங்காவின் தோழி பவித்ராவுக்கும் போன் செய்த ராஜ்குமார், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளான். ஆனால் ராஜ்குமார் – பிரியங்கா இடையிலான சண்டை குறித்து பவித்ரா கூறிய தகவல்களால் சந்தேகமடைந்த போலீசார், ராஜ்குமாரை உரிய முறையில் கவனித்துள்ளனர். அதன் பின்னர் ராஜ்குமார் உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவனை போலீசார் கைது செய்தனர்