கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளை வடகொரியா மூடியதால், ரஷ்ய தூதர அதிகாரிகள் பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு நடந்தே தங்கள் நாட்டுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது.
Vladislav Sorokin என்னும் ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேர், ரயில் பாதையில் நகரக்கூடிய ட்ராலி ஒன்றைத் தள்ளிக்கொண்டு ரஷ்யா நோக்கி வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என வடகொரியா கூறிக்கொண்டிருந்தாலும், அது நாட்டுக்குள் கொரோனா வைரஸ் நுழைவதைத் தடுப்பதற்காக மற்ற நாடுகளுடனான பயணிகள் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்து விட்டதோடு, நாட்டின் எல்லைகளையும் மூடிவிட்டது.
தனது நாட்டில் கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லாததால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஓராண்டுக்கும் மேலாக எல்லைகள் மூடப்பட்டதால்தான் இப்படி கஷ்டப்பட்டு வீட்டுக்குத் திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பம்!