கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்தது, நேற்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
இதனை அடுத்து மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.
இந்நிலையில் பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து விபத்துக்குள்ளான புகையிரத்தினை இழுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.