யாழ்ப்பாணத்தில் வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் P. S. M. Charles அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த 17 வயதான சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட விடயம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடமும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான உண்மை என்ன என்பதையும் தீர்க்கமாக விசாரிக்குமாறு கூறியுள்ளார்.
மேலும், ஆளுநர் செயலக அலுவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.
பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறிய ஆளுநர் இது தொடர்பாக கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகளை தடுக்கும் வேலைத்திட்டங்களையும் வேகமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குற்றச் செயலாக அமைந்திருப்பின் அது தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆளுநர் செயலகம் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்துவதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராதிருக்கத் தேவையான காத்திரமான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுப்பதையும் செயலகம் உன்னிப்பாக அவதானிக்கும் என்றார்.
மேலும், பொதுமக்களும் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.