இலங்கை தமிழரான தனது கணவரை பொலிசார் விடுவிக்கா விட்டால் குழந்தைகளுடன் தற்கொலை செய்வேன் என மனைவி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்த இலங்கை தமிழரான பாண்டியன் ராஜா (39) என்பவர், குற்ற வழக்கில் சிக்கி, 2019ம் ஆண்டு, ஜூலை முதல், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது, அவினாசி, துவாக்குடி, பெருமாநல்லுார், நல்லிபாளையம், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.இந்நிலையில், போலி பாஸ்போர்ட் வழக்கிலிருந்து பாண்டியன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.மற்ற வழக்குகள் முடியும் வரை, திருச்சியிலுள்ள இலங்கை தமிழர் முகாமில், காவல் துறையின் கண்காணிப்பில் தங்கியிருக்க, அரசு உத்தரவிட்டது.
இதனால், நேற்று காலை, 11:10 மணியளவில், பாண்டியனை திருச்சி அழைத்துச் செல்ல புழல் மத்திய சிறையிலிருந்து வாகனம் வெளியேறிய போது, அங்கு காத்திருந்த அவர் மனைவி ரூபா (25) தன் மூன்று ஆண் குழந்தைகளுடன், பொலிஸ் வாகனத்தை மறித்தார்.அப்போது, என் கணவரை, இப்போதே விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூன்று குழந்தைகளுடன், கன ரக வாகனம் முன் விழுந்து, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.
இதையடுத்து அந்த இடம் பரபரப்பானது.பின்னர் அங்கிருந்த பொலிசார் ரூபாவையும், குழந்தைகளையும் மீட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.