“முடியாது எனக்கூறி விட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்த அரசாங்கம் நொண்டி அரசாங்கம். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல், கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் 2015 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டு நாட்டை விட்டு ஓடிய அரசாங்கம். அன்று இருந்த நிலைமைதான் இன்றும் இருக்கின்றது.
அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் இன்று நிதி அமைச்சர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமர். எனவே, இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதானால்தான் நாட்டு மக்கள் மீது சுமைகளை திணிக்கின்றனர்.
இன்று எமது தோட்டத்திலுள்ள தாய்மார் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறைசோறு திண்ணும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு முதுகெலும்பில்லை. எமது தாய்மாருக்காக போராடுவோம்.” – என்றார்.