தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடு முழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை அரசுக்கு அறிவித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய பொருட்களை நாளை (25), மே 31, ஜூன் 4ஆகிய திகதிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக இம்மாதம் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும், பின்னர் ஜூன் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பயணத்தடை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்று நாளை (25) அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டு நாளை இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நாளை 25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது பொதுப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
இதேவேளை, மே 25 ஆம் திகதி, மே 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதி ஆகிய நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியுமெனவும் நடை பயணத்தில் மாத்திரமே வெளியில் சென்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.