மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன். இவ்வாறாக தியாகத்தின் சிகரமான திலீபன் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமான 15.09.2022 அன்றும் அதற்கு முன்பாக நடைபெற்ற ஒழுங்குபடுத்தல் நிகழ்வுகளின் போதும் இடம்பெற்ற கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலை, தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.
தியாகி திலீபன் அறப்போரினை நடத்தி ஆகுதியான நல்லூர் மண்ணிலேயே இச்சம்பவங்கள் நடைபெற்றது மிக வேதனை அளிப்பதாக உள்ளது. அளவிட முடியாத தியாகத்தினை எவருமே தமது வாக்கு அரசியலுக்கு பயன்படுத்துவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அத்துடன் நினைவு நிகழ்வின் போது ஒரு மாவீரரின் தந்தையும், தியாகி திலீபன் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் கூட இருந்தவரும், நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை கொண்ட மூத்த போராளியுமான ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். ஒரு மாவீரரின் வணக்க நிகழ்வில் இன்னொரு மூத்த போராளியை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பார்த்தீபன் இன்னமும் பசியுடனேயே இருக்கின்றான். 35 வருடங்கள் கடந்தும் தியாகி திலீபன் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், எமது உரிமைகளை இழந்து, எமது நிலங்கள் எங்கள் எதிரியினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளோம். தமிழினமே ஓரணியாக அணிதிரண்டு போராடவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே அனைவரும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து, அனைவரும் நினைவெழுச்சி நிகழ்வுகளின் புனிதத்தை களங்கப்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நினைவெழுச்சி நிகழ்வுகள் எந்தவொரு அரசியல் கட்சியினதும் தனியுரிமை சொத்தல்ல. இந்நிகழ்வுகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களின் முன்னெடுப்பில் நடைபெறுவதாகவே அமைய வேண்டும்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பு தொடர்பான முன்னெடுப்புகள் நடைபெறுவதாக அறிகின்றோம். ஆயினும் நாம் மேலே குறிப்பிட்டது போல் நினைவெழுச்சி நிகழ்வுகள், அதற்கான பொதுக்கட்டமைப்பு என்பன கட்சி அரசியலை கடந்து பொது சமூகமாகிய மாவீரர்களின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் அடங்கியவர்களின் முன்னெடுப்பிலேயே கட்டமைக்கப்படவேண்டும். இவ்வாறான முன்னெடுப்பினை மேற்கொள்ளும் பொது சமூக தரப்பிற்கே எமது பரிபூரணமான ஆதரவு இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இதற்கு மேலும் இவ்விடயத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ளும் களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என அனைத்துத்தரப்பினரிடமும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தியாகி திலீபன் அவர்களின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்… எனும் இலட்சிய வாக்குக்கு அமைய தொடர்ந்து பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம் – என்றுள்ளது.