தமிழகத்தில் குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்தவர் மாணிக்கம் (63).
இவருடைய மனைவி ஞானசவுந்தரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மாணிக்கம் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெருமாள்புரத்தில் உள்ள பிள்ளையார்குளத்தில் குளிக்க சென்றார்.
அதன்பிறகு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பிள்ளையார் குளத்தின் கரையில் மாணிக்கம் பிணமாக மிதந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுகுறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.