மன்னார், மடுவில் வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய இராணுவப் பெண் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – Compassion Relief எனும் தொனிப்பொருளில் இலங்கையை சேர்ந்த Thalagala Sri Sriddhartha Foundation (தலகல சிறி சிறித்தார்த அறக்கட்டளை) – யுடன் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited (Singapore) இணைந்து நாடுமுழுவதும் 63.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 42,500 குடும்பங்களுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வவுனியா 653 -ம் பிரிவு பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு, மேற்கு மற்றும் சின்னப்பண்டிவிரிச்சானை சேர்ந்த கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையில் உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளென பலரும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு உலருணவுப்பொதிகள் வாங்க வருகை தந்த நிலையில், குறித்த பொதிகளை மேடைக்கு சென்று வாங்கி கைகளிலேந்திகொண்டு கீழே இறங்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர்.
இதனை நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விளங்கிக்கொண்ட இராணுவப்பெண்மணி ஒருவர் அவர்களுக்கு உதவி வந்துகொண்டிருந்தார்.
அப்போது ஒரு வயோதிப பெண் மேடைக்கு ஏறச்சென்ற போது அவரின் செருப்பு கழன்றபோது மீண்டும் போட்டுக்கொள்ள குறித்த வயோதிபப்பெண்மணி சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது, இதனை அவதானித்த குறித்த இராணுவப் பெண்மணி அந்த வயோதிபப்பெண்மணியின் செருப்பை போட்டுவிட்டு கையோடு அரவணைத்துக்கொண்டு உலருணவுப்பொதியை பெற்றுக்கொடுத்து அவருடன் வந்து பெண் மேடைக்கு அருகில் வர அவருடன் வழியனுப்பி வைத்தார்.
குறித்த இராணுவப் பெண்மணியின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச்சியடைய செய்துள்ளது.
குறித்த பெண், இராணுவம் என்பதை தாண்டி, இயலாதவர்களின், ஏழைகளின் வலிகளை புரிந்துகொண்ட ஒரு பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர்களின் பெற்றோரால் அவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளார் என அங்கிருந்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்ததை அவதானிக்க முடிந்தது.