இளங்கோ அடிகள் சிலம்பினை எழுதியமை எல்லோரும் அறிந்ததே. அவர் கோவலன்- கண்ணகி வாழும் காலத்தில் வாழ்ந்தவரல்ல; அவ்வாறாயின் அவரிற்கு எவ்வாறு அக் கதை தெரியும்? குன்றக் குறவர் சேரன் செங்குட்டுவனிற்கு முதன் முதலில் கண்ணகி கதையினைக் கூறுகின்றார்கள்.
அப்போது சாத்தனார் எனும் புலவர் (இவரே இளங்கோ அடிகளை இக் காப்பியத்தினைப் பாடும்படி பின்னர் கேட்டுக் கொண்டவர்) தனக்கு அக் கதை தெரியும் எனக் கூறுகின்றார். எனவே இக் கதை அதுவரை எழுத்து வடிவம் பெறவில்லை. எவ்வளவு காலமாக இக் கதை இருக்கின்றது? தெரியவில்லை,
ஆனால் நற்றிணையிலேயே சான்று உண்டு . “ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையராயினும் வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே”. எனச் சங்க இலக்கியத்திலேயே கண்ணகி கதை சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது.
இவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட சங்ககாலப் பாடலாகவும், நாட்டுப் புறக் கதைகளாகவும் கண்ணகியின் கதை காவப்பட்டு வந்தது. இதனையே ஒரு முழுக் காப்பியமாக இளங்கோ அடிகள் படைக்கின்றார்.
சோழ நாட்டில் பிறந்த கண்ணகியினை, பாண்டிய நாட்டில் “தேரா மன்னா செப்புவதுடையேன்” என அறம் பேச வைத்துப் பின்னர், சேர நாட்டில் தெய்வநிலை அடையுமாறு இளங்கோ அடிகள் தனது காப்பியத்தில் படைத்திருப்பார். இவ்வாறு சேர சோழ பாண்டிய நாடுகளை இணைத்து ஒரு நாடாகத், தமிழர்களின் நாடாக அடையாளம் காட்டியதோடு, அதனைத் தமிழ்நாடு என முதன் முதலில் அழைத்தவர் இளங்கோ அடிகளே.
இந்த இளங்கோ அடிகள் இலங்கையினையும் தனது காப்பியத்தில் பதிவு செய்யத் தவறவில்லை. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்…” என இலங்கையிலிருந்து வந்த கயவாகு மன்னனை இளங்கோ அடிகள் பதிவு செய்கின்றார்.
இந்த மன்னனே இலங்கைக்குக் கண்ணகித் தொன்மத்தினைக் கொண்டு வந்தவர். இவரைச் சிங்கள மன்னன் எனவே பலரும் சொல்வார்கள். கயவாகு மன்னன் காலத்தில் {பொது ஆண்டு 2ம் நூற்றாண்டு / கி.பி 2ம் நூ,} சிங்களம் என்றொரு மொழியே தோற்றம் பெற்றிருக்கவில்லை; அவரது காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பின் தோன்றிய மொழியின் பெயரில் கயவாகுவினை அடையாளம் காட்டுவதனை என்ன சொல்வது!
கயவாகு அனுராதபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன், ஐரோப்பியர் வருகைக் காலம்வரை அனுராதபுரம் முழுக்க முழுக்கத் (மிகப் பெருமளவுக்கு) தமிழர்களையே கொண்ட ஒரு நகர் என்பதற்கான சான்றுகளை ஐரோப்பியர் குறிப்புகளிலேயே காணலாம்.
கயவாகு மன்னன் இலங்கைக்குக் கண்ணகித் தொன்மத்தினைக் கொண்டு வந்ததற்கான அகழ்வாய்வுச் சான்றுகள் கூட உண்டு. கயவாகு மன்னன் இலங்கைக்குக் கண்ணகித் திருவுருவினைக் கொண்டு வந்து இறங்கிய துறைமுகம் ` சம்பு கோளா ’ எனப்படும் சம்புத் துறைமுகம் ஆகும். சம்புத் துறைமுகம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள திருவடிநிலைக்கு சிறிது தூரத்தில் இருக்கின்றது.
அரசன் தான் இறங்கிய இடத்துக்கு அருகிலிருந்த `அங்களுமைக் கடவை’ என்னும் இடத்திலே ஒரு கண்ணகி கோயிலை முதலில் கட்டினான் என்றும் `பத்தினி வழிபாடு` பற்றி ஈழத்திலே எழுந்த பழமையான கோயில் இதுவேயாகும் என்றும் இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியரும் ஈழத்தின் பெரும் தமிழறிஞருமான முனைவர் க. கணபதிப்பிள்ளை அவர்களும் கூறுகின்றார்.
அங்கணுமைக்கடவை, பழமையும் பெருமையும் உள்ள ஒரு கண்ணகித் தலமாகும் என்பதற்கு மட்டக்களப்பிலே வழங்கும் `உடுகுச்சிந்து` எனும் நூற் குறிப்பும் சான்று பகிர்கின்றது. இராசாவளி {Rajavaliya} எனும் 16ம் நூற்றாண்டுச் சிங்கள நூலும் பத்தினித் தெய்யோ எனும் கண்ணகி இந்தியாவிலிருந்து இலங்கைக்குக்குக் கொண்டு வரப்பட்ட தொன்மம் பற்றி விரிவாகக் கூறுகின்றது.
இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த கண்ணகிக்கு திருவடி நிலையினை அடுத்து, யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளிலும் கோட்டங்கள் அமைக்கப்பட்டன. பத்தாவது இடமாக முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோட்டம் (தற்போதைய கண்ணகி அம்மன் கோயில்) அமைக்கப்பட்டதாக ஒரு செவி வழிக் கதையுண்டு. இதற்குப் பின்னர் கண்டியிலும் கண்ணகிக்கு கோயில் எழுப்பப்பட்டது. \
இந்தப் புகழ் பூத்த கண்ணகி கோயில் பற்றிய செய்தியினை `காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே’ என `ஊர்சுற்றுக் காவியம்’ எனும் மட்டக்களப்பு பழைய நூலொன்று கூறுகின்றது. கண்டியிலிருந்தே மட்டக்களப்புக்குக் கண்ணகி வழிபாடு வருகின்றது. மட்டக்களப்பு ஊர்கள் தோறும் கண்ணகி வழிபாடு இன்றும் சிறப்புடன் காணப்படுகின்றது.
இங்குள்ள கண்ணகிக் கோயில்கள் ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துப் பிரிவினராலும் பூசை செய்யும் வகையிலேயே, தமிழில் வழிபாடு நடைபெறும் வகையிலேயே இந்த மட்டக்களப்புக் கண்ணகி ஊர்க் கோயில்கள் பலவும் இன்றும் காணப்படுகின்றன.
இலங்கையின் மிகப் பெரும் திருவிழாவாக இன்றும் இலங்கையில் கொண்டாடப்படும் விழா கண்ணகிக்கு ஆனது எனில் பலர் வியப்படையக் கூடும். `எசலா பெரகரா` ( The Kandy Esala Perahera) என்ற பெயரில் பத்தினித் தெய்யோவினை மையப்படுத்தி கண்டியில் நடைபெறும் விழாவினையே குறிப்பிடுகிறேன்; அதுவே இலங்கையின் மிகப் பெரும் விழா.
பத்தினித் தெய்யோதான் கண்ணகி என்பதனை இலங்கையிலுள்ள எளிய சிங்கள மக்கள் அறியாமல் சிங்களப் பேரினவாதமும், தமிழ் எளிய மக்கள் அறியாமல் சைவச் சாதியப் பெருமைவாதிகளும் பார்த்துக் கொண்டார்கள். சிங்களவர் பத்தினி தெய்யோவினைப் போற்றுகிறார்கள், மட்டக்களப்பிலும் பழமை பேணுகிறார்கள், தமிழை வளர்ப்பது நாம் தான் என்ற ஆணவத்திலுள்ள யாழ்ப்பாணத்தவர்களாகிய நாம், முதன் முதலில் இலங்கைக்கு வந்து சேர்ந்த கண்ணகி கோட்டங்களை, என்ன செய்தோம்? அவற்றினை எல்லாம் `இராஜராஜேஷ்வரி அம்மன்` எனச் சமற்கிரதப் படுத்தி, சமற்கிரதத்தில் திட்டு வாங்கிக் கொண்டு தட்சணை கொடுக்கிறோம்.
ஆம், கண்ணகித் தொன்மத்தினை யாழ்ப்பாணத்தில் அழித்தது சிங்களவனோ அல்லது ஐரோப்பியரோ அல்லது அராபியரோ அல்ல. அந்தத் தொன்மங்களை அழித்தது நாமேதான். இனங்களின் அடையாளங்களை அழிப்பதும் ஒரு வகை `இனப்படுகொலை` என வரையறுப்பார்கள், அந்த வகையில் இது ஒரு `இனத் தற்கொலை` நிகழ்வாகும்.
கண்ணகித் தொன்மம் ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் உண்டு. மட்டக்களப்பிலிருந்து இங்கிலாந்து கொண்டு வரப்பட்டு, அருங்காட்சியகத்திலுள்ள கண்ணகி சிலை வைக்கப்பட்டுள்ளது.