கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிதாக 4 சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ பகுதிகளில் குறித்த 4 சிகிச்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம் ) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள் இதுவரை இயக்கச்சி மற்றும் வட்டரக்க கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கே அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படின் அதற்கு முகம் கொடுக்கும் வண்ணம் இந்த புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே சிறைச்சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை குறைத்துக்கொள்வதற்காக, சிறு குற்றங்கள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்ட 14,000 கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 19 ஆயிரம் பேர் வரையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.