தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு தான் திமுகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள குஷ்பு தனது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தான் தொடங்கினார்.
கட்சியில் குஷ்பு வளர்ந்து வருவதை ஸ்டாலின் உள்பட திமுக முன்னணி தலைவர்கள் விரும்பவில்லை என்ற தகவல் அப்போதே வெளியானது.
ஒரு கட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக திமுக உடன் பிறப்புகளின் கோபத்திற்கு ஆளாகி குஷ்பூவின் வீடு தாக்கப்பட்டது.
இதையடுத்து, திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான நடிகை குஷ்பு, பின்னர் அக்கட்சியில் இருந்தும் விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், திமுகவில் இருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து நடிகை குஷ்பு தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், திருச்சியில் திருமணத்துக்கு சென்றபோது, செருப்பை வீசினார்கள், புடவை முந்தானையை பிடித்து இழுத்தார்கள். திமுகவில் இருக்கும் பெண்கள் அனைவரும் திட்டமிட்டு என்னை கேவலப்படுத்தி அசிங்கமாக பேசினார்கள். அப்போது ஸ்டாலினிடம் கெஞ்சினேன் அவரை பார்க்க வேண்டும் என்று.
ஆனால், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் பார்க்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
என் வீட்டில் கல் வீசினார்கள். என் இரண்டு பெண் குழந்தைகள் தனியாக இருக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என ஸ்டாலினிடம் கதறினேன். கட்சிக்காரர்களிடம் சொல்லுங்கள் என்று சொன்னேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் பார்க்க முடியாது என்று சொன்னவர் ஸ்டாலின். அவர் எப்படி தமிழக பெண்களை காப்பாற்றுவார்? என கூறினார்