திமுக தலைவரும் சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாகவே இருக்கும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். இன்று காலையிலேயே மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் ஆகியோர் வந்தனர். பொதுமக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து நால்வரும் தங்களது வாக்கைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாகவே இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.