வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தல் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டகவுடன் நடிகர் வடிவேலு நடிக்க நாய் சேகர் படத்தின் அறிவிப்பு வெளியானது. நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கும் நாய் சேகர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இதனால் வடிவேலு படத்துக்கு சிக்கல் எழுந்தது.
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அதற்கு முன் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிரடியாக வெளியானது. சதீஷ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தங்கள் படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலுவின் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று பெயர் வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியது. இதன் ஒரு பகுதியாக திடீரென இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நாய்களுடன் டான் போன்ற தோற்றத்தில் வடிவேலு அமர்ந்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது. போஸ்டரில் இது ஒரிஜினல் என்று குறிப்பிட்டுள்ளது. சதீஷின் நாய் சேகர் படத்துக்கு விடப்பட்ட சவால் போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.