ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ள நிலையில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன.
அத்துடன் கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும் கொழும்பில் காணப்படுகின்றன.
முதல்குடும்பம் மீதான பொதுமக்களின் சீற்றம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது. எனினும் ராஜபக்ச சகோதரர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளன,சகோதரர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுயல்கின்றனர் என அவை தெரிவித்துள்ளன.
கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியா திரும்பிய மறுநாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டனர்.
கொழும்பில் உள்ள ராஜபக்சாவின் வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு வீதியிலும் ஆர்ப்பாட்டம் வெடித்தது, கோ ஹோம் கோத்தா என்ற பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.
மிரிஹானவில் உள்ள பங்கிரிவத்தையில் பதட்டமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோத்தபாய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பெருப்பிக்கப்பட்ட யூப்பிலி சந்தி வியாழக்கிழமை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை சந்தித்தவண்ணமிருந்தது.
எங்களிற்கும் குழந்தைகள் உள்ளன என பதாகைகளுடன் பெண்களும் குழந்தைகளும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். கோத்தபாய ராஜபக்ச தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதை இலகுவாக்குவதற்காக யூப்பிலி சந்தி புனரமைக்கப்பட்டது.
கொழும்பும் நாட்டின் ஏனைய பகுதிகளும் 13 மணிநேர மின்வெட்டினை எதிர்கொண்டுள்ளன. மேலும் ,எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தங்களால் சேவையில் ஈடுபடமுடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது