தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் தீபாவளி திருநாள் இந்துக்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மற்ற மதத்தினரும் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய இனிய நாளாக இருந்து வருகிறது. நரகாசுரனை அழித்து மக்களின் நிம்மதிக்காக கொண்டாடப்படும் இந்த திருநாள் இன்றளவிலும் கூட நாட்டில் இருக்கும் தீயவைகள் ஒழிந்து, நன்மைகள் நடைபெறும் என்கிற நம்பிக்கையுடன் நாம் கொண்டாடி வருகிறோம். காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது முதல், இரவு புஸ்வானம் வெடித்து விட்டு தூங்கச் செல்லும் வரை அன்றைய நாள் முழுவதும் நாம் நண்பர்களுடன், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தீபாவளி திருநாள் அன்று செய்யக்கூடாத 5 முக்கிய விஷயங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
குறிப்பு 1: தீபாவளி திரு நாளில் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். நல்லெண்ணெயுடன் அரப்பு தேய்த்து குளிப்பதன் மூலம் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அதி காலையில் எழாமல் மற்ற நாட்களைப் போல தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு மகாலட்சுமி பூஜைகளை முடித்து விட வேண்டும். எனவே அதிகாலையில் எழுவதை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
குறிப்பு 2: எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான அரப்பு பொடியில் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். சந்தனத்தில் பூமாதேவி நிறைந்து இருக்கிறாள். மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவி வாசம் செய்கிறாள் எனவே அதிகாலையில் எழுந்து நல்லெண்ணையை உடல் முழுவதும் பூசி காய விட்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதால் கங்கையில் குளிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. நரகாசுரனை வதம் செய்த நாள் என்பதால் அரப்பு பொடி கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து சுத்தமாகி சந்தனமும், மஞ்சள் கலந்த குங்குமத்தையும் கட்டாயம் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்து தீபாவளி திருநாளை நிறைவாக ஆரம்பிப்பது நல்லது.
குறிப்பு 3: தீபாவளி அன்று பெரியவாளுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடைய பரிபூரண ஆசீர்வாதம் இருந்தால் தான் நம் வாழ்வின் அடுத்தகட்ட முன்னேற்றம் சிறப்பாக அமையும் என்கிறது சாஸ்திரம். எனவே வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அன்றைய நாள் முழுவதும் அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தேவையற்ற சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. எல்லோருடனும் மகிழ்ச்சியுடன், இன்முகத்துடன் இருப்பதால் லட்சுமி கடாட்சத்தை பரிபூரணமாக பெற்று கொள்ளலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
குறிப்பு 4: தீபாவளி இவ்வருடத்தில் சர்வ அமாவாசை உடன் ஐப்பசியில் வந்திருக்கிறது. அமாவாசை நன்னாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது தான் நல்லது. மேலும் இந்நாளில் கந்தசஷ்டி ஆரம்பமாகிறது. சஷ்டி விரதம் இருப்பவர்கள், அமாவாசை திதி கொடுப்பவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. புகை, மது போன்ற தீய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். சுத்தமான பக்தியுடன், அசைவம் தவிர்த்த சைவ உணவுகளை உண்டு, போதை வஸ்துகளை புறக்கணித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய திருநாளாகும்.
குறிப்பு 5: தீபாவளி அன்று அமாவாசை வருவதால் அன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் அழுவது கூடாது, ஆண்கள் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் தள்ளி வைப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். பித்ரு பூஜை, இஷ்ட தெய்வ பூஜை, குபேர பூஜை, லட்சுமி பூஜை, சஷ்டி விரதம் கடைபிடிப்பவர்கள் முருகனுக்கு பூஜைகள் செய்து, வேல் வழிபாடு செய்வது வேண்டும். எவ்வளவோ பேர் உடுத்த உடையின்றி, உண்ண உணவின்றி இருப்பார்கள். இன்றைய நாளில் உங்களால் முடிந்த வஸ்திர தானம், அன்னதானம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும். அனைவரும் இந்த தித்திப்பான தீபாவளி திருநாளை நினைக்க நினைக்க திகட்டாத அளவிற்கு கொண்டாடி மகிழுங்கள்!